தமிழர் பற்றிக் குறிப்பிடும் பிற்காலக் கல்வெட்டுக்கள் | இலங்கையில் பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர் | என்.கே.எஸ்.திருச்செல்வம்
Description
இலங்கையில் பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டு வரை பிராமிக் கல்வெட்டுக்கள் எழுதப்பட்டன. அதன் பின்பு அதாவது 6 ஆம், 7 ஆம் நூற்றாண்டுகளில் கல்வெட்டுக்கள் எதுவும் பொறிக்கப்படவில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதன் பின்பு 8 ஆம், 9 ஆம், 10 ஆம் நூற்றாண்டுகளிலே சில கல்வெட்டுக்கள் மட்டுமே பொறிக்கப்பட்டன. இவை தமிழ், சிங்களம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டன.
பொ. ஆ. 853 முதல் 887 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையை ஆட்சிசெய்த 2 ஆம் சேனன் காலத்தில் கிபிஸ்ஸ கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு சிகிரியாவின் தென்மேற்கில் 4 கி.மீ தூரத்தில் உள்ள கிபிஸ்ஸ என்னுமிடத்தில் உள்ள வாவல வெவ எனும் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் 1973 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது.
இக்கல்வெட்டு ஒரு தூணில் எழுதப்பட்டிருந்தது. அப்போது இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்த தூண் பல துண்டுகளாக உடைந்துள்ளமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. தூணின் மேல் பகுதியில் உள்ள இரண்டு துண்டுகள் மட்டுமே கிடைக்கப்பெற்றன. ஏனைய துண்டுகள் காணப்படவில்லை.
கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த சிங்கள எழுத்து வடிவத்தைக் கொண்டுள்ளன. இதில் மன்னனால் வழங்கப்பட்ட ஒரு நன்கொடை பற்றிய செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ சங்கபோ எனும் மன்னனின் 32ஆவது ஆட்சி ஆண்டில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இவன் 2ஆம் சேனன் என அடையாளம் காணப்பட்டுள்ளான்.
“இசா தெமழ அதிகார ..”
“பொதில் சோழியா ரதுன் வெதெர் மென்..”
இது “திறை பெறுவதற்காக சோழநாட்டின் ஆணையுடன் வந்த தமிழ் அதிகாரி” எனப் பொருள்படுகிறது. இத்தமிழ் அதிகாரியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் 13ஆம் வரியில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் சிதைந்து காணப்படுகின்றன. எனவே இத்தமிழ் அதிகாரியின் பெயரைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
2ஆம் சேனன் காலத்தில் (பொ. ஆ. 853 முதல் 887 வரை) பொறிக்கப்பட்ட நாச்சதூவ கல்வெட்டிலும் தமிழர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுராதபுரத்தின் தென்கிழக்கில் 15 கி.மீ தூரத்தில் நாச்சதூவ குளம் அமைந்துள்ளது. இக்குளத்தின் அருகில் உள்ள நாச்சதூவ கிராமத்தில் 1911 ஆம் ஆண்டு இக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.